திருமண விழாக்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மாற்று கட்சித் தலைவர்கள் புகழும் போக்கு அண்மைக் காலமாகப் பெருகிவருகிறது.
தமிழக அரசியல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. திருமண நிகழ்ச்சிகளில்கூட கட்சிகளின் கூட்டணி நிச்சயக்கப்பட்டிருக்கிறது. திருமண அழைப்பிதழ் கொடுத்த சென்றவர்கள், வரும்போது தொகுதி உடன்பாட்டை முடித்துகொண்டு வந்த கதைகள் எல்லாம் தமிழகம் ஏற்கனவே கண்ட வரலாறுதான். அந்த வகையில் திருமண விழாக்களுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மாற்றுக் கட்சியினர் புகழும் போக்கு அதிகரித்திருக்கிறது.


கடந்த செப்டம்பர் மாதத்தில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பாஜக முன்னாள்  தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்டாலினைப் பாராட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த விழாவில் பேசிய சிபிஆர், “கருணாநிதிக்குப் பிறகு யார் என்று வருகிறபோது, மு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டுமல்லாமல், எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் திகழ்கிறார். நாங்கள் இன்னும் கருணாநிதி போல அதிகம் உழைக்க வேண்டும் என்பதைத்தான் இதிலிருந்து நான் எடுத்துக்கொள்கிறேன்" மு.க. ஸ்டாலினுக்குப் புகழாரம் சூட்டினார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
இதையடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் புதுக்கோட்டையில் திமுக எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், “தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்தான்” என்று பேசியது அரசியல் வட்டாரத்திலும் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் பேசிய அரசக்குமார், “12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எப்படி பார்த்தேனோ, அதே கட்டுடல் குறையாமலும், அழகு குறையாமலும் அப்படியே இப்போதும் இருக்கிறார். ஆண்டவன் மீது ஆணையிட்டு ஒன்றைச் சொல்கிறேன். எம்ஜிஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின்தான்.
ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று மக்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் இருக்கையை தட்டிப்பறிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் ஒரு இரவுக்குள் கூவத்தூருக்குச் சென்று பிடித்திருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயகத்தின் மூலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் காத்திருக்கிறார். காலம் கனியும், காரியங்கள் நடக்கும். மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாங்கள் பார்த்து அகமகிழ்வோம்'' என்று வெளிப்படையாகப் பேசியது பாஜகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடந்த அரசியல் களேபரங்களில் பி.டி.அரசகுமார் திமுகவில் இணைந்தார்.


இப்போது சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன், “நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று பேசியிருப்பது அரசியல் களத்தைச் சூடாக்கியிருக்கிறது. தஞ்சையில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் இல்ல மணவிழாவில் பங்கேற்ற  திவாகரன், “கன்னடத்திலிருந்து வந்த ஒருவர், பெரியாரை பேசும் அளவிற்கு இன்று துணிச்சல் வந்துள்ளது. திராவிட தலைவர்கள் அடுத்தடுத்து மறைந்ததால் இந்த நிலை வருகிறது. தமிழ், தமிழகம்தான் நமக்கு முக்கியம். அதை காப்பவர்களுக்கு பின் நாம் நிற்க வேண்டும். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். நாளைய தமிழகம் அவர்தான்.” என்று பேசினார்.
திருமண விழாக்களில் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை மாற்றுக் கட்சித் தலைவர்கள் புழந்து பேசுவது அதிகரித்துள்ள நிலையில், தங்களுடையை எதிர்கால அரசியலுக்காக அப்படி பேசுகிறார்களா அல்லது திமுகவினரை குளிர்விக்க அப்படிப் பேசுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.