தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இந்து வாக்காளர்கள் ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் வேல் யாத்திரையை பாஜக நடத்த திட்டமிட்டுள்ளது. திமுகவை டார்கெட் செய்து பாஜக செயல்படுவதால், பாஜகவுக்குப் பதிலடி கொடுக்க தற்போது திமுகவும் முடிவு செய்திருக்கிறது. மேலும் இளைஞர்கள், புதிய வாக்காளர்களின் வாக்குகளைக் கவரவும் திமுக முடிவு செய்திருக்கிறது. இதற்காக உதயநிதி ஸ்டாலினை களமிறக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 
 மாநில அளவில் உதயநிதி ஸ்டாலினை வைத்து பிரமாண்ட பிரசாரம் செய்யத் திட்டமிடட்டுள்ளது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த திமுக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் எழுந்து நின்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியைப் பறிகொடுத்தது. இரண்டு ஆண்டுகளில் திமுக எழுந்து நிற்பதற்கு மு.க. ஸ்டாலின் 2015-ம் ஆண்டு செப்டம்பர், அக்டோரில் நடத்திய ‘நமக்கு நாமே’ பிரசாரம் பயன் அளித்தது என்பது திமுகவின் கணக்கு.

 
தற்போது கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் திமுக இல்லாத நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்தே தீருவது என்ற வேகத்தில் திமுக உள்ளது. எனவே, 5 ஆண்டுகளுக்கு முன்பு மு.க. ஸ்டாலின் நடத்திய பிரசாரம் போல் உதயநிதி ஸ்டாலினைக் கொண்டு பிரசாரம் நடத்துவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ‘நமக்கு நாமே 2.0’ என்றழைக்கப்படும் இந்தப் பிரசாரத்தில் இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் குறி வைக்கும் வகையில் வேலைவாயில்லா திண்டாட்டம், மத்திய, மாநில அரசு அலுவலங்களில் வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு, இந்தி திணிப்பு போன்றவற்றை மையப்படுத்தி உதயநிதி பிரசாரம் செய்வார் என்கிறார்கள் திமுகவில்.
மேலும் கொங்கு மண்டத்தில் அதிமுக முக்கியத்துவம் கொடுக்கவும் இந்த பிரசாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 நகராட்சிகள், கிராமங்கள் வழியாக இந்தப் பிரசாரத்தை மேற்கொள்ளவும் திமுகவில் திட்டமிடப்பட்டுள்ளது. ‘நமக்கு நாமே 2.0’ பிரசார பயணத்தை திமுக இளைஞரணி வகுத்துவருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரசாரத்துக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.