சட்டப்பேரவையில் திமுக கூட்டணியின் பலம் 109 ஆக அதிகரித்துள்ள நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற திமுக அதிரடி திட்டங்களை  தீட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 இடைத்தேர்தல்கள் ஆளும் அதிமுக அரசின் தலைக்கு மேலே கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தது. 9 தொகுதிகளில் வென்றதன் மூலம் 123 உறுப்பினர்களுடன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக. அதிமுகவின் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் ஆதரவு இல்லாமலலேயே தற்போது 118 உறுப்பினர்கள் அதிமுகவுக்கு உள்ளனர். எனவே, எஞ்சிய 2 ஆண்டு கால ஆட்சியை ஓட்ட அதிமுகவுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற திமுக கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி அளவுக்கு இடைத்தேர்தலில் கிடைக்கவில்லை. 13 தொகுதிகளில் மட்டுமே திமுகவால் வெற்றி பெற முடிந்தது. திமுகவின் எண்ணம் தவிடுபொடியானது. அதேவேளையில் சபையில்  திமுகவின் கூட்டணியின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்தது. இதில் காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால், திமுக கூட்டணியின் பலம் 109 ஆக உள்ளது.


இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறாததால், சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெற வைக்கவும் அதிமுக அரசுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கவும் அக்கட்சி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. “சட்டப்பேரவையில் எங்கள் அதிரடியை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று மு.க. ஸ்டாலின்  செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். மேலும் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய கேள்விக்கு, “வெயிட் அண் ஸீ” என்று பதில் அளித்திருந்தார்.


அதிமுக ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் நோக்கில், அதிமுக தரப்பிலிருந்து எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சிகளை திமுக மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த முக்கியஸ்தர்கள் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற இரு எம்.எல்.ஏ.க்கள், அதிருப்தியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் ஸ்கெட்ச் போடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


ஏற்கனவே டிடிவி தினகரனும், “சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிச்சயம் வரும். அப்போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்” என்று  தெரிவித்திருந்தார். சபாநாயகர் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆளுங்கட்சிக்குக் கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தை அளிக்க திமுக திட்டமிட்டு காய்களை நகர்த்திவருகிறது. இதனால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.