இரண்டு நாட்கள் மாநாடு! என்று முடிவு பண்ணி ஏற்பாடுகள் செய்தாச்சு. ஆனால் இரண்டு நாட்களும் என்னவெல்லாம் செய்வது? என்பதுதான் தி.மு.க.வின் குழப்பமே.

ரிசல்ட்....கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு, ஆளுக்கொரு தலைப்பு கொடுத்து பேசச் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி தி.மு.க.வில் ஒரு காலத்தில் தன் பேச்சில் வார்த்தைக்கு வார்த்தை வேட்டு வைத்து கலக்கிய வெற்றி கொண்டானின் மகனான வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் பேச வந்தார்.

வந்த வேகத்தில் ‘மேடையில் பல தலைப்புகளில் பேச சிலர் வருகிறார்கள். வரும்போதே ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ’இங்கே ஒரு சிவப்பு லைட் இருக்குது. அது ஒளிர்ந்துச்சுன்னா நீ பேச்சை நிறுத்திடணும்.’ அப்படின்னார். ஓ.கே! இங்கேயெல்லாம் சிவப்பு லைட் இருக்குது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காரின் கொண்டையிலிருந்த சிவப்பு விளக்கு எங்கே போனது? அதை அவரே கொண்டு போய் டெல்லி மோடியிடம் அடகு வைத்துவிட்டார்.” என்றார். 

சூர்யா வெற்றிகொண்டான் தனது பேச்சு நெடுக தங்கள் கட்சியின் தலைவரை பெயரை சொல்லியே ‘கலைஞர், கருணாநிதி’ என்றுதான் குறிப்பிட்டார். ஆனால் ஸ்டாலினை புகழ்ந்து பேசுகையில் தளபதி, செயல்தலைவர்! என்றெல்லாம் குறிப்பிட்டவர் ஒரு இடத்தில் ‘ஸ்டாலின்’ என்று குறிப்பிட்டுவிட்டார். உடனே தன்னை திருத்திக் கொண்டு ’தளபதியின் பெயரை குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும்.’ என்றார். 

தொண்ணூறு வயதை கடந்த, கழகத்தின் அச்சாணியாக ஆணி வேராக இருக்கக் கூடிய கருணாநிதியின் பெயரை சர்வசாதாரணமாக குறிப்பிடுவாராம்! ஆனால் அப்பேர்ப்பட்ட தலைவரின் மகனின் பெயரை குறிப்பிடுவதற்கு பயப்படுகிறாராம். 

இதைக் கவனித்துவிட்ட அரசியல் விமர்சகர்கள்...ஏன் இந்த பயம்? செயல்தலைவரின் பெயரை குறிப்பிடக் கூடாது என்று ஏதேனும் வாய்மொழி உத்தரவா? ஒருவேளை ‘கள ஆய்வு’ நிகழ்வின் போது ஸ்டாலின் சொன்னது போல் அக்கட்சியில் சர்வாதிகாரம் உருவாகிவிட்டதா? ஆக மொத்தத்துல என்னடா நடக்குது தி.மு.க.வுல? என்கிறார்கள்.

கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்