என்னாங்கண்ணே சின்னப்புள்ளத்தனமா இருக்குது!...- என்று மிக தாராளமாக தி.மு.க. நண்பர்கள் வட்டாரத்தை (துரைமுருகன் அப்படித்தானே சொல்லியிருக்கார்!) பார்த்து கமெண்ட் அடிக்கலாம் போல. அந்தளவுக்குதா நடந்து கொள்ள துவங்கியிருக்கிறார்கள். ஸ்கூலில் குழந்தைகள் ‘மிஸ் இவன் என்னை கிள்ளுறான் மீஸ்!’ என்று புகார் சொல்லும்போது டீச்சர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். காரணம், அடுத்த சில நொடிகளிலேயே அடிச்ச குட்டியும், அடிபட்ட குட்டியும் ஒரே சாக்லேட்டை ஆளுக்கொரு கடி கடித்தபடி குஷாலாய் சுற்றும்-ங்கள். 

கிட்டத்தட்ட அதே போல்தான் ஆகிவிட்டது தி.மு.க. நண்பர்கள் குலாமும். இவர்களுக்குள் யாராவது யாரைப் பற்றியாவது பகீர் ரக ஸ்டேட்மெண்டை ஒரு நாள் விடுத்து பரபரப்பை கிளப்புவதும், அதற்கு சம்பந்தப்பட்ட நபர் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு உட்காராத குறையாக அதிர்வதும், அடுத்த சில நாட்களிலேயே சண்டைக்கோழிகள் ரெண்டும் ஒன்றாய் சேர்ந்து திரிவதுமாக போய்க் கொண்டிருக்கிறது சூழ்நிலை. 

சேனல் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், பரந்து விரிந்து உட்கார்ந்திருந்த துரைமுருகன்  “ம.தி.மு.க.வும், வி.சி.க.வும் எங்கள் நண்பர்களே. அவர்கள் எங்கள் கூட்டணியில் இல்லை.” என்று ஓங்கியடித்தார் ஒரு ஆப்பு. இதை சர்வ ஊடகங்களும் பெரும் சர்ச்சையாக எழுதியும், பேசியும் ஊழித்தீயாய் பற்ற வைத்தன. வைகோவும், திருமாவும் வெறுத்துப் போனார்கள். அடுத்த சில நாட்களில் அறிவாலயத்துக்கு சென்று ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன். இந்த சந்திப்பின் போது துரைமுருகனும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அடுத்த நாளே வைகோவும் சென்றார் அறிவாலயத்துக்கு. அப்போதும் துரைமுருகன் நின்று சிறப்பித்தார். 

இந்த கூத்து கிளப்பிய வைப்ரேஷன்களே முடியவில்லை. அதற்குள் வைகோ மற்றும் திருமா இடையில் உருவானது ஒரு உரசல். அதாவது, ‘தலித் ஒருவர் நாட்டுக்கு தலைமை ஏற்பது’ எனும் கான்செப்டில் உருவான கேள்விக்கு வைகோ ஆதரவற்ற ரியாக்‌ஷம் காட்டிட, இதற்கு திருமாவின் நிழலான வன்னியரசு ச்சும்மா வெச்சு செய்துவிட்டார் ஒரு கடிதத்தில். இது இரு கட்சிகளிடையே பெரும் உரசலை உருவாக்கியது. 

வைகோ - திருமா மோதல்! என்று சகல ஊடகங்களும் எழுதித்தள்ளி தி.மு.க. நண்பர்கள் வட்டாரத்தினுள் பெரும் சர்ச்சை சங்கை ஊதினர். இந்த நிலையில் இன்று வைகோவை தன் பரிவாரங்களுடன் தேடிச் சென்று சந்தித்திருக்கிறார் திருமாவளவன். ரெண்டு பேரும் மாற்றி மாற்றி பொன்னாடை போர்த்தியதென்ன, திருமா மொபைலில் 5 மாநில தேர்தல் ரிசல்ட் தகவல்களை வைகோ செக் செய்ததென்ன, ’எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.’ என்று  இரண்டு பேரும் பரஸ்பரம் உருகிக் கொண்டதென்ன...இப்படியாக காலையில் தூக்கிப்போட்டு மிதி, மத்தியானமானதும் கண்ணீர் வழிய கட்டிப்பிடி! என்று தி.மு.க. கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக நடந்து வரும் கூத்துகள், மக்களை ‘ம்ம்ம்ம்ம்முடியலைங்க!’ என்று நோக வைத்திருக்கின்றன.