திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைவையடுத்து புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் திமுகவில் நடைபெற்றன. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்தப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் வரும் 9-ம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர்  பதவிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல்  செய்யலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப்பெற வரும் 5 -ம் தேதி கடைசி நாள் என்றும்  திமுக அறிவித்துள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு ஏற்கனவே துரைமுருகனை  தேர்வு செய்ய முடிவானது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடவே கடந்த மார்ச் மாதத்தில் துரைமுருகன் அந்தப் பதவியை பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், ஒன்றை மாதங்களுக்கு முன்பு பொருளாளர் பதவி மீண்டும் துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுச்செயலாளர், பொருளாளர் என இரு பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனை தேர்வு செய்வது உறுதியாகி உள்ளது.


எனவே பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு, ஏ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பதவிக்கு பல தலைவர்கள் போட்டியிடும்பட்சத்தில் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொருளாளர் பதவி தேர்வு செய்யப்பட்டால், பிறர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் போகக்கூடும். எனவே, நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது அந்தப் பதவிகள் யாருக்கு வழங்கப்படும் என்பதும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.