பிரதர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதியுள்ள  இசையமைப்பாளர் இளையராஜா தொடர்பாக திமுக எந்த வித கருத்து தெரிவிக்காத நிலையில், தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என மத்திய இணை அமைச்சர் எல் .முருகனுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோடியும்-அம்பேத்கரும்

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து இளையராஜா அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். இதற்கு அரசியல் விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த பிரச்சனையில் திமுகவை விமர்சித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

இளையராஜா-திமுக கருத்து கூறவில்லை

பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 80 ஆண்டுகாலத்திற்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்வாளாக இயங்கி வரும் முரசொலி அறக்கட்டளை கட்டிடம் குறித்து, வேலூரில் இவர் பேசிய அவதூறு பேச்சு குறித்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், இவர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது அவதூறாக பேசுவதும் - கருத்து தெரிவிப்பதையும் எல்.முருகன் வாடிக்கையாக கொண்டிருப்பதாவும் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை. பிரதமர் மோடி குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதைபோல், இளையராஜா அவர்களின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

வழக்கு தொடர நேரிடும்- திமுக எச்சரிக்கை

மேலும் தேவையில்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, முரசொலி இடம் குறித்து தாங்கள் பேசியது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கினை தங்கள்மீது தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும், தங்களின் இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை எச்சரிக்கையாவும் – அறிவுரையாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.