முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா என்பது குறித்து விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று திமுக  தரப்பில் அதிரடியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்ட ட்வீட்டை வைத்து தமிழக பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி விசாரணைக்கு ஆஜராகக் கோரி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதை ஏற்று முரசொலி அறங்காவலர் என்ற அடிப்படையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி நேரில் ஆஜரானார். அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இந்தப் புகார் அரசியல்  ரீதியானது என்றும், இதுபோன்ற புகாரை விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது என்றும், நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்க முடியும் என்று நீண்ட விளக்கத்தை அளித்தது.


பின்னர் செய்தியாளர்களை ஆர்.எஸ்.பாரதி பேசினார். “முரசொலி நிலம் தொடர்பான உரிய ஆவணங்களுடன் நாங்கள் ஆணையத்துக்கு வந்தோம். எங்கள்மீது குற்றச்சாட்டு வைத்தவர் எங்கள் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது என்பதற்கான ஆவணங்களை அவரால் அளிக்க முடியவில்லை. எங்கள் எதிரில்தான் அமர்ந்திருந்தார். அவரால் எந்த ஆதாரத்தையும் வழங்க முடியவில்லை. தலைமைச் செயலாளரும் வரவில்லை. புகார் அளித்தவரும், தலைமை செயலாளரும் வாய்தா வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் வாய்தா வாங்குவது எதைக்காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். 


எங்கள் மீது பொய்ப் புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளோம். நாங்கள் ஆணையரிடம் ஒரு விஷயத்தைக் கேட்டோம், சாலையில் செல்லும் யாராவது ஒருவர் புகார் அளித்தால் விசாரிப்பீர்களா? பிரதமர் இல்லம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று நாங்கள் புகார் அளித்தால் விசாரிப்பீர்களா? தமிழக முதல்வர் வசிக்கும் இடம் பஞ்சமி நிலத்தில் உள்ளாது என்று சொன்னால் விசாரிப்பீர்களா? தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று சொன்னால் விசாரிப்பீர்களா என்றும் கேட்டோம்.


அதுமட்டுமல்ல, நான் ஆணையரிடம் சொன்னேன், உங்களுக்கு இதை விசாரிக்கும் அதிகாரமே இல்லை என்றேன். ஒருவர் மீது புகார் அளிக்கும்போது இந்திய சாட்சியங்கள் சட்டப்படி அவரிடம் ஆதாரங்கள் எல்லாம் இருக்க வேண்டும். சீனிவாசன் எங்கள் மீது கூறியிருக்கிறார். அவரால் ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியவில்லை. அவர் வாய்தா கேட்கிறார். அரசுக்கு சம்மன் அனுப்பினார்கள், அரசும்  வாய்தா வாங்கியுள்ளது. அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் இது பஞ்சமி நிலமா இல்லையா என்பதை சொல்லிவிட முடியும்.


இந்தப் புகாரை விசாரிக்க  உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்பு. அதற்கு உள்ள அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்ற வழங்கியுள்ள வழிகாட்டுதலை எல்லாம் கொடுத்துள்ளோம். போகிற போக்கில் சாலையில் செல்பவர்கள் சொல்லும் புகாருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. இந்த வழக்கு இன்றே முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். இந்த வழக்கில் எப்போது அழைத்தாலும் மீண்டும் ஆஜராவோம். டெல்லிக்கு அழைத்தாலும் சந்திக்க தயார் என்று ஆணையரிடமே சொல்லிவிட்டு வந்துவிட்டோம்” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.