தேமுதிகவை பொறுத்தவரை இனி அனைத்தும் பிரேமலதாவின் விருப்பப்படி தான் நடைபெறும் என்பதை திருப்பூரில் நடைபெற்ற அந்த கட்சியின் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்ததது போல் இருந்தது.

தேமுதிக எனும் கட்சியை தனி ஒரு ஆளாக துவங்கி தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் பதவி வரை உயர்ந்தவர் கேப்டன். ஆனால் தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு முன்பு போல் ஆக்டிவாக பாலிடிக்ஸ் செய்ய முடியாமல் அவர் தவித்து வருகிறார். ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது திருப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் வாயிலாக தெரியவந்தது. 

இனி விஜயகாந்த் அவ்வளவு தான் என்று ஏளனம் செய்தவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு நடந்தே பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் கேப்டன். ஏன் விஜயகாந்த் வீல் சேர் பயன்படுத்தக்கூடாது என்று- விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு கேப்டனின் நடை சரியான பதிலடி கொடுத்தது. பேசுவதற்கு முன்னதாக குரலை சரி செய்து கொண்டு அவர் ஆரம்பித்த போது தொண்டர்கள் சிலர் மெய்சிலிர்த்தனர்.

பேச்சில் முன்பு போல் தெளிவு இல்லை என்றாலும் தற்போது கேப்டன் பேசியது ஓரளவிற்கு மக்களுக்கு புரிந்தது. பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் என் தொண்டர்கள் முன் பேசுவேன் என்கிற கேப்டனின் வைராக்கியம் தொண்டர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இப்படியாக கேப்டன் தொண்டர்களை வந்து சந்தித்துவிட்டு சென்றாலும் திருப்பூர் பொதுக்கூட்டம் முழுக்க ஒரு விஷயத்தை கூறியது.

முன்பெல்லாம் பொதுக்கூட்டம் மற்றும் மாநாடு நடைபெற்றால் நிகழ்ச்சி நிரல் குறித்து ஏற்பாட்டாளர்கள் கேப்டனிடம் தான் விவாதிப்பார்கள். ஆனால் நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைத்து விஷயத்தையும் பிரேமலதாவிடம் தான் விவாதித்தார்கள். மேலும் கேப்டனுக்கு நிகராக பிரேமலதாவிற்கு தடல் புடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேனர்கள் அனைத்து அகற்றப்பட்டாலும் கூட அதற்கு முன்பு வரை பிரேமலதாவுக்கும் பிரமாண்ட பிளக்ஸ்கள் வைக்கப்பட்டிருந்தன. இதே போல் வருங்கால தமிழகம் என்று அடிக்கப்பட்ட போஸ்டர்களில் பிரேமலதாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

மேடையில் சுமார் அரை மணி நேரம் பிரேமலதா பேசினார். இப்படியாக எங்கும் பிரேமலதா எதிலும் பிரேமலதா என்று தான் இந்த பொதுக்கூட்டடம் நடந்து முடிந்துள்ளது.