M.K Stalin : 'வாரிசு தானே' என்று கூறியவர்கள் அடங்கிவிட்டார்கள்.! இனியெல்லாம் இவர்தான்.! முரசொலி பாராட்டு !
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது.
முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றார். அதன்படி ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், ‘முந்நூற்று அறுபத்து ஐந்து நாட்களுக்கு முன்னால் - மே 7 அன்று - 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்....' என்று சொல்லி நிமிர்ந்து பார்த்தார்! தமிழ்நாடே நிமிர்ந்தது.
அவர் அந்த உறுதிமொழியை வாசிக்க வாசிக்க - தமிழர்கள் ஒவ்வொருவரும் வாயசைத்து வாசித்துக் கொண்டார்கள்! தாங்களே உறுதியேற்றுக் கொள்வதாக ஒரு உணர்வை அது ஏற்படுத்திவிட்டது! சமூகநீதியைக் குரலாகவும் - சுயமரியாதையை உணர்வாகவும் நித்தமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறார். தந்தை பெரியார் இன்று மேடையில் முழங்கினாலும் ஒலிக்கும் சொற்கள்தான் இவை! பொறுப்பை ஏற்றுக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
'வாக்களித்த வர்க்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்து நான் பணியாற்றுவேன்' என்கிறார். அண்ணா இருந்திருந்தால் ஒலிக்கும் குரல் இதுவாகத்தான் இருக்கும். 'இது ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு' என்று கம்பீரமாகச் சொல்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்திருந்தால் சொல்லும் சொல் இதுவாகத்தான் இருக்கும்! இந்த ஓராண்டு காலத்தில் தமிழ் நாடாக - தமிழினமாக - தந்தை பெரியாராக - பேரறிஞர் அண்ணாவாக - முத்தமிழறிஞர் கலைஞராக உயர்ந்தும் எழுந்தும் நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! அவர் ஆட்சி அமைப்பதற்கு முன்பு வரை - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் தலைவர்.
திராவிட - தமிழியத் தத்துவங்களை முன்னெடுத்துச் செல்லும் முதலாமவர். இந்தக் கொள்கையை விமர்சிப்பவர்கள், அவரையும் விமர்சித்துக் கொண்டு இருந்தார்கள். இன்னும் சிலர்,'வாரிசு தானே' என்று வசைபாடிக் கொண்டு இருந்தார்கள். இன்னும் சிலர் இவரைப் பொருட்படுத்தாமல் கூட அலட்சியப்படுத்தினார்கள். காலம் மாறியது. இந்த ஓராண்டு காலத்தில் ... கோடானு கோடித் தொண்டர்களுக்கு தங்கள் இயக்கத் தலைவர், முதலமைச்சர் ஆகிவிட்டார் என்ற மகிழ்ச்சி.
திராவிட - தமிழியத் தத்துவங்களின் வழிநடப்பவர்களுக்கு தங்களது முதலாமவர் ஆட்சியில் ஏறியதால் தங்கள் தத்துவத்துக்கு ஆட்சி மகுடம் கிடைத்துவிட்டது என்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது இந்த ஓராண்டு காலச் செயல்பாடுகள் சிக்கலை ஏற்படுத்தியது மற்ற தரப்பினர்க்குத்தான். அவரை தேர்தலுக்கு முன்புவரை வெளிப்படையாக விமர்சித்தவர்கள், தங்கள் விமர்சனத்தை நிறுத்திவிட்டார்கள். 'வாரிசு தானே' என்று இழுத்தவர்கள் அடங்கிவிட்டார்கள். 'இவர் தேர்ந்த அனுபவஸ்தராகத்தான் இருக்கிறார். ரொம்ப பொறுமையா செயல்படுறார்' என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள்.
இவரைப் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியவர்கள்தான், இப்போது இவரை அதிகமாக விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ளூர ஒரு குற்றவுணர்ச்சி கூட இருக்கலாம். 'இப்படி ஒருவரைத் தெரிந்து கொள்ளாமல் கண்மூடி இருந்துவிட்டோமே' என்று உள்ளுக்குள் நொந்தும் கொள்ளலாம். இந்த ஓராண்டு காலம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கே முக்கியமான காலம் தான். தன் பலத்தை தானே அறிந்து - தன் திறத்தை தானே உணர்ந்து - தன் கனவைத் தானே நெய்து - தன் தமிழினத்தை தானே உய்விக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஓராண்டு இவை. அவர் ஓய்ந்து இருக்கவில்லை.
சாய்ந்தும் இருக்கவில்லை. சோர்ந்தும் இருக்கவில்லை. மக்களை நோக்கி ஓடிக் கொண்டே இருந்தார். அவர் இருந்த இடம், மக்களை மகிழ்விக்கும் இடமாக இருந்தது. அவர் இருந்த நேரம், மக்கள் துன்பத்தைத் துடைக்கும் நேரமாக இருந்தது. அவரது கரங்கள், கொடுத்துக் கொண்டு இருந்தன. அல்லது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தன. "பொது வாழ்வைப் பூங்காவாக நான் எப்போதும் கருதுவது இல்லை. அது புயலை எதிர்த்து நிற்பதாகத்தான் அப்போதும் இருந்துள்ளது. இப்போதும் இருக்கிறது. அதற்குக் காரணம் எனது குறிக்கோள் என்பது பதவியாக - பொறுப்பாக மட்டும் இருந்தது இல்லை. கொள்கையாக இருந்தது.
சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார் - இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா - இயக்கத்தை வழிநடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர் - மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர் - இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள்தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள்! இந்த நால்வரும் தனிமனிதர்கள் அல்ல. தத்துவத்தில் அடையாளங்கள். 'மாடல்' என்பது ஆங்கிலச் சொல் தான். அதற்கான சரியான தமிழ்ச் சொல்லைச் சொல்வதாக இருந்தால் - 'திராவிடவியல் ஆட்சிமுறை' தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும்.
தமிழினத்துக்கு நம்பிக்கை பிறந்துவிட்டது. வாழ்விக்க நீருமாய் - சாய்விலிருந்து தடுக்க வாளுமாய் ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற பெருநம்பிக்கையை இந்த ஓராண்டு கொடுத்து விட்டது. தமிழ்நாட்டுக்கு ஏதோ, பத்து வயது கூடிவிட்டதைப் போல இருக்கிறது - வளர்ச்சியை வைத்து! தமிழர்களுக்கு ஏதோ பத்து வயது குறைந்துவிட்டதைப் போல இருக்கிறது - மலர்ச்சியை வைத்து.
பெரியாரின் தடி இல்லை - அண்ணாவின் பொடி இல்லை - கலைஞரின் மடி இல்லை - இதோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தோளே படியாகி நாட்டை அரை நொடிக்கொரு முறை அங்குலம் அங்குலமாக உயர்த்திக் கொண்டு இருக்கிறது! ஆட்சிக்கு ஓராண்டு முடிவுற்று - ஈராண்டு தொடங்குகிறது. இனியெல்லாம் இவராண்டே என 'முரசொலி' வாழ்த்துகிறது! வணங்கி நிற்கிறது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி முதல்வர் ஸ்டாலினை பாராட்டியிருக்கிறது.