டெல்லியில் திமுகவின் முகமாக கனிமொழி இருக்க கூடாது என்கிற ஸ்டாலினின் பிளான் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டதாகவே அக்கட்சியினர் சீரியசாக பேசிக் கொள்கிறார்கள்.

மாநிலங்களவை எம்பியாக இருந்த கனிமொழி தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதனை அடுத்து எதற்கு பிரச்சனை என்று தூத்துக்குடி தொகுதியை கனிமொழிக்கு ஒதுக்கினார் ஸ்டாலின். அங்கு தமிழிசையை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தன்னுடைய செல்வாக்கை நிருபித்தார் கனிமொழி. இதற்கு பரிசாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் கனிமொழி.

ஏனென்றால் கலைஞர் இருந்த போது மாநிலங்களவை திமுக குழு தலைவராக கனிமொழி தான் செயல்பட்டு வந்தார். அதற்கு முன்பு தலைவராக இருந்த திருச்சி சிவாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு கலைஞர் தனது மகள் கனிமொழிக்கு அந்த உயரிய பொறுப்பை கொடுத்தார். அந்த வகையில் நாடாளுமன்ற குழு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த கனிமொழிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் திமுக எம்பி தமிழச்சி அசத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பேசிய அவரது பேச்சு பாஜகவினரையே ரசிக்க வைத்தது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஒரு பிடி பிடித்து தமிழச்சி பேசிக் கொண்டிருந்தார். அதனை நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் சிரித்த முகத்துடன் ரசித்துக் கொண்டிருந்தார். இதே போல் அவர் பேசி முடித்த உடன் எதிர்கட்சியினர் ஒட்டு மொத்தமாக கரகோசம் செய்தனர்.

தமிழச்சியின் கன்னிப் பேச்சு தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது இதே போல் எக்சிட் மற்றும் நெக்ஸ்ட் என்று அழைக்கப்படும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நேற்று திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் அத்தனை எம்பிக்களும் கலந்து கொண்ட நிலையில் தமிழச்சி தான் கவனத்தை ஈர்த்தார்.

தேர்வுகளுக்கு எதிராக தமிழச்சி போட்ட முழக்கம் தான் போராட்டத்தின் ஹைலைட் ஆனது. இதனால் அவரிடம் சென்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பேட்டி எடுக்க முற்பட்டது. ஆனால் கனிமொழி அங்கு இருப்பதை கவனித்த தமிழச்சி பேட்டி கொடுக்க தயங்கி மறுத்தார். பிறகு கனிமொழியிடம் பேட்டி எடுக்கப்பட்டது.

கிட்டதட்ட டெல்லியில் கனிமொழியை ஓரம்கட்ட வேண்டும் என்பது தான் ஸ்டாலின் தரப்பின் நீண்ட நாள் ஆசை. அது தெரிந்தோ தெரியாமலோ தமிழச்சி மூலமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது.