சோனியா காந்தி  ராகுல்  காந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் இன்று  வெளிநடப்பு செய்துள்ளனர்.  முன்னதாக நடைபெற்ற விவாதத்தில் ,  விடுதலைப்புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருந்தது என திமுக எம்பி டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். இது புலிகள் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 1984ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப்பின்னர்.  எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது அதே நேரத்தில் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபின் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அனைத்து முன்னாள் பிரதமர் மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.  இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினர்,  காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி,  ராகுல் காந்தி,  பிரியங்கா காந்தி,  ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சகம்,  உளவு அமைப்புகள்,   பாதுகாப்பு அமைப்புகள்  கூடி ஆலோசனை  நடத்துவது வழக்கம்.  அந்த வகையில்  கடந்த மே மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டு வந்த  எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. 

அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.  இந்நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி,  பிரியங்கா காந்தி,  ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.  அவர்களுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பே வழங்கப்படும் என தெரிவித்தது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன இந்நிலையில் மக்களவை இன்று கூடிய நிலையில்,  சோனியா குடும்பத்திற்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதைக் கண்டித்து திமுகவினர்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அப்போது திமுக மக்களவையில் திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி. ஆர் பாலு கடும் விவாதம் நடத்தினார்.  அப்போது சோனியா,  ராகுல்,  பிரியங்கா ஆகியோரின் பாதுகாப்பதற்காகவே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது.  ஆனால் மத்திய அரசு  அரசியல் உள்நோக்கத்தோடு அதை ரத்து செய்துள்ளது. 

விடுதலைப்புலிகளால்  சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருந்தது என அப்போது அவர் சத்தம் போட்டு கூறினார்.  அவரின் இப்பேச்சு புலிகள் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதேநேரத்தில் காங்கிரஸ் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளோம் என்று திமுக கூறி வரும் நிலையில் புலிகளில் மீதான வெறுப்பை திமுக இன்று வெளிபடுத்தி உள்ளது என பலர் விமர்சித்து வருகின்றனர்.