சுயமரியாதை திருமணச்சட்டத்தை நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.,யான செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தர்மபுரி தொகுதி எம்.பியான செந்தில்குமார், ‘’சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற வேட்கையில், இந்தியாவில், சமூக சீர்திருத்தப் புரட்சிக்கு வித்திட்ட மிகப்பெரிய சமூக நீதி ஆளுமைகளான சாஹு மஹாராஜ், ஜோதிராவ் புலே, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் கியோரை, இத்தருணத்தில், நன்றியுடன் நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன். இவர்களின் மாபெரும் பங்களிப்பினால்தான், சமூகநீதியை, இன்று வரை, நாம் முன்னெடுக்க முடிகிறது. தமிழ்நாட்டில், திராவிட கொள்கைளை முன்னெடுத்த புரட்சியாளர் தந்தை பெரியாரின் அயராத உழைப்புக்கு கிடைத்த பயனால், கடந்த 1967 இல், சுயமரியாதை திருமணச் சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டம் மூலம், பூசாரிகள் இல்லாமலேயேகூட, திருமணம் நடத்துவதற்கும் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும், தர முடிந்தது. இதைத் தொடர்ந்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில்கூட, இதேமாதிரியான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்தியாவிலோ, இன்னமும் இதுபோன்ற சட்டம் கொண்டு வர முடியாத நிலையே உள்ளது. எனவே இந்த சபையின் மூலமாக, இந்தியா முழுவதும் பின்பற்றக்கூடிய அளவில், சுயமரியாதை திருமணச்சட்டத்தை இயற்ற வேண்டும் என மத்திய அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

தொலைநோக்கு பார்வை கொண்ட மாபெரும் தலைவராக திகழ்ந்த கலைஞர், தனது ஆட்சிகாலத்தில், மூன்றாம் பாலினத்தவர், உடல் ஊனமுற்றோர் ஆகிய தரப்பினருக்கும், உரிய மரியாதை வழங்க வேண்டும் என்பதில், குறியாக திகழ்ந்தார். அதற்காகவே, திருநங்கைகள் ’மற்றும் மாற்றுத்திறனாளிகள்’ போன்ற மதிப்புமிகு பெயர்களை சூட்டி, சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தவும் செய்தார். இம்மக்களுக்கு, அரசு பதவிகளில், இடஒதுக்கீடு அளிக்கவும், அரசு முன்வர வேண்டும்.

மனித மலத்தை, மனிதனே கையால் அள்ளும் அவலம், இன்னமும் நீடிக்கிறது. இதை ஒழித்துக் கட்ட, ரோபோக்கள் உள்பட நவீன இயந்திர சாதனங்களைக் கொண்டு, மாற்று ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த, தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற அடிப்படையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இன்னமும் கொத்தடிமை தொழிலாளர்கள், இருந்து வருகின்றனர். இவர்களை கண்டறிந்து, மீட்பதோடு மட்டுமல்லாது, அவர்களுக்குரிய மறுவாழ்வு நிவாரண உதவிகளையும் செய்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள குரும்பர், நரிக்குறவர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை, நிறைவேற்றித்தர வேண்டும்.அதன்மூலம், அச்சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை, பலமடங்கு மேம்படுத்த முடியும். சில தினங்களுக்கு முன், தமிழ்நாட்டில் ஒரு சாதிமறுப்பு திருமணம் நடைபெற்றது.

இது, காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு வழக்காக மாறியுள்ளது. அதாவது, திருமணம் முடிந்தபிறகு, அந்த பெண் கடத்தப்பட்டு மாயமாகி உள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக, தம்பதியினருக்கு, தொடர்ச்சியாக மிரட்டல் விடப்பட்டதோடு மட்டுமல்லாது, தாக்கப்பட்டும் உள்ளனர். வன்முறை நடத்தப்பட்டதற்கான, சிசிடிவி ஆதாரங்களும் இருக்கின்றன. இருந்தும், அந்த ஆதாரங்களை, தமிழ்நாடு போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, இத்துறையின் மத்திய அமைச்சர் தலையிட்டு, இளமதி மற்றும் செல்வன் என்ற அந்த தம்பதியினரை, மீட்டு காப்பாற்றுவதற்கு, உரிய நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும்’’என அவர் தெரிவித்தார்.