குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சில மாணவிகளும் மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த கோலம் போடப்பட்ட பகுதிக்கு வந்த அடையாறு சாஸ்திரி நகர்  காவல் துறையினர் கோலத்தை வரைய அனுமதி மறுத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை போலீஸார் கைது செய்து சமூக கூடத்தில் வைத்தனர்.


மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். “ நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை  தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்.” என கனிமொழி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தனது வீட்டு வாசலில் கோலமிட்டு, குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக வேண்டாம் சிஏஏ. வேண்டாம் என்.ஆர்.சி. என கோலமாவு மூலம் எழுதியதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.