குடும்பத் தலைவிக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்றும், முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருக்கிறார் கனிமொழி எம்.பி.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53வது வார்டுக்கு உட்பட்ட மூலகொத்தளம் சிபி சாலையில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ‘கொரோனா கால கட்டத்தில் ரூ 1000 அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதை ரூ 5000 ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தது. ஆனால் அதிமுக செய்யவில்லை. இதனால் திமுக ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள ரூ 4000 கொடுப்பதாக முதல்வர் சொன்னார், அதை கொடுத்தார்.

திமுகவை பார்த்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சொல்லும் தகுதி, அருகதை யாருக்கும் கிடையாது. அதிமுக கஜானாவை காலி செய்துவிட்டு போன நிலையில் ஒவ்வொரு திட்டத்தையும் செய்வது என்பதே போராட்டமாக இருக்கிறது. ஆனாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செய்வேன் என முதல்வர் தீர்மானமாக உள்ளார்.

குடும்பத் தலைவிக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும். மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று இந்த பகுதியில் கழிவுநீர் பிரச்னை அடிப்படை பிரச்னைகளை நமது வேட்பாளர் செய்து கொடுப்பார். காசிமேடு பகுதியில் 150 கோடிக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது’ என்று பேசினார்.