தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுப்படுத்தும் விதமான பேச்சு... தயாநிதி மாறன் மீது கடும் கோபத்தில் மு.க.ஸ்டாலின்..?
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுப்படுத்தும் விதமாக பேச்சு திமுகவில் தொடர்ந்து கொண்டிருப்பதால் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கோபத்தில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுப்படுத்தும் விதமாக பேச்சு திமுகவில் தொடர்ந்து கொண்டிருப்பதால் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கோபத்தில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதிகளாக வந்தது திமுக போட்ட பிச்சை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவர் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரினாலும், பாஜக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் மூலம் மீண்டும் அதேபோன்ற ஒரு சிக்கலில் மாட்டி இருக்கிறது திமுக. தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்தபோது அவர் தங்களை அவமானப்படுத்தி விட்டதாகவும், மரியாதை குறைவாக நடத்தியதாகவும் திமுக எம்.பி.க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்தக்குழுவில் இடம் பெற்றிருந்த தயாநித மாறன் தலைமை செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்களைப்போல் நடத்தினார். அந்த வார்த்தையை வாயில் சொல்ல முடியவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களா? என்றார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் தனது டுவிட்டர் பதிவில், தலைமை செயலாளர் குறித்து திமுக எம்.பி.க்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய சரி. ஆனால், நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா என்றதும் அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கம் இல்லை என்றாலும், இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தை பாதித்திருக்கிறது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். திமுக கூட்டணியில் இல்லாத பல கட்சிகளும் தயாநிதி மாறனின் பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமைச் செயலரை சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின்போது திமுக எம்.பி.க்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில் தான் கூறினேனே தவிர யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் இருந்த அதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், தயாநிதி மாறன் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கோபத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.