தொலைக்காட்சி விவாதங்களில் இடதுசாரி, திராவிட சிந்தனையாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் நெறியாளார்களே அந்தச் சிந்தனை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் பாஜகவும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் குற்றம் சாட்டிவருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாத பாஜகவுக்கு தொலைக்காட்சி விவாதங்களில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக திமுகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக கட்சி பத்திரிகையான ‘முரசொலி’யில் நீண்ட தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியில், “பாஜக மத்தியில் ஆள்கிறார்கள். அதிமுக தமிழ்நாட்டை ஆள்கிறது. இந்த இரு கட்சிகளின் பிரதிநிதிகளின் குரல் தொலைக்காட்சி விவாதங்களில் தெம்பாக கனத்த சாரீரத்தோடு ஒலிக்கக் காணலாம். அவர்களின் பேச்சியேலே மிடுக்கைக் காட்ட கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்களாம். இவர்கள் சில நேரங்களில் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். அதற்குரிய வகையில் நெறியாளர்களால் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 


பாஜகவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லை. இங்கே உள்ள அவர்களின் தலைவர் ஒருவர் வெளி மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர்கள் கட்சியில் பரந்துபட்ட உறுப்பினர்கள் இல்லை. மிஸ்டு காலில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுவிட்டனர் என்று கதைக்கிறார்கள். ஆனால், ஒரு மாவட்டத்தில்கூட பாஜக பெரிய பலமுள்ள கட்சி என்று சொல்ல முடியாத நிலை. இருப்பினும் தொலைக்காட்சி விவாதங்களில் அந்தக் கட்சி தமிழ் நாட்டில் பலம் வாய்ந்ததுப் போல காட்டிக்கொண்டு பேசுவார்கள். நடந்துகொள்வார்கள். முடியுமானால், மிரட்டி உருட்டிப் பார்ப்பார்கள்.” என்று எழுதப்பட்டுள்ளது.
பாஜக-அதிமுகவின் அழுத்தம், அச்சுறுத்தல். ஆசை காட்டுதல் ஆகியவற்றுக்கு பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளையும் கருத்து சுதந்திரத்தையும் நடுநிலையையும் ஊடகங்கள் இரண்டாம்பட்சமாக கருதி, பின்னிடத்துக்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொள்ளுமானால், திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்திட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ‘முரசொலி’யில் விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.