திமுக எம்எல்ஏக்கள் மூலமாக உதயநிதியின் பாரக்கிரமங்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏக்கள் பேசும் போது திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஓரிரு வார்த்தைகள் புகழ்ந்துவிட்டு பேசுவது வழக்கம். மிகவும் சீனியர் எம்எல்ஏக்கள் என்றால் அண்ணாவையும் சேர்த்து புகழ்வார்கள். ஒரு சிலர் பெரியாருக்கும் தங்கள் மரியாதையை செலுத்துவார்கள்.

இப்படி திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பேசும் போது சில மரபுகளை கடைபிடித்து வருகின்றனர் அந்த மரபில் கடந்த ஒரு வார காலமாக பகீர் மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. பேச்சை துவங்கும் முன்பாக திமுக எம்எல்ஏக்கள் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதிக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

அதிலும் சில எம்எல்ஏக்கள் உதயநிதியை 3ம் கலைஞர் ரேஞ்சுக்கு தூக்கிப் பேசுகின்றனர். இவை அனைத்து சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும் போதே நடைபெறுகிறது. நேற்று கூட திமுக எம்எல்ஏ தாயகம் கவி பேசினார். அப்போது கலைஞர், ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர் உதயநிதி ஸ்டாலின் பெயரையும் கூறி நன்றி தெரிவித்தார்.

அப்போது திடீரென அமைச்சர் ஜெயக்குமார் எழுந்தார். மேலும் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பது தெரிகிறது. ஆனால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது என்று கூறினார்.

இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பில் இருந்து பலத்த கைதட்டல் வந்தது. அதாவது நேற்று வந்த உதயநிதிக்கு நன்றி தெரிவிக்கும் திமுக எம்எல்ஏக்கள் முதுபெரும் தலைவரான அன்பழகனை கண்டுகொள்வதில்லை என்று ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து உதயநிதி புகழைத்தான் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து திமுக எம்எல்ஏக்களிடம் கேட்ட போது தற்போது சட்டப்பேரவையில் அன்பழகன் இல்லை. ஒரு வேளை அவர் இருந்தால் அவரும் கூட உதயநிதியை பாராடடி பேசிவிட்டு தான் அடுத்த விஷயத்தை பேசியிருப்பார் என்று ஒரே போடாக போட்டார்கள். அதுவும் சரி தான். திமுகவின் பாரம்பரியம் அது தானே.