சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதுச்சேரிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள். அப்போது புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்கள்.
புதுச்சேரிக்கு ஏப்ரல் 24 அன்று வர உள்ள மத்திய உள் அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க திமுக எம்எல்ஏக்கள் முடிவெடுத்துள்ளனர்.
ஸ்டாலினுக்கு கோரிக்கை
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி ஆட்சி வந்த பிறகு மாநிலத்தில் வளர்ச்சி இல்லை என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான திமுக, கூட்டணி ஆட்சி மீது தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அண்மையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.

என்.ஆர். காங்கிரஸ் - பாஜக ஆட்சி
இதுதொடர்பாக எதிர்க்கட்சித்தலைவரான சிவா இன்று கூறுகையில், “கடந்த 2021-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதுச்சேரிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள். அப்போது புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் அமர்ந்து ஓராண்டாகிவிட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

அமித்ஷா வருகை
இன்னொருபுறம் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் என பலரும் வாரந்தோறும் புதுச்சேரிக்கு வருகிறார்கள். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். ஆனால், புதுச்சேரிக்கு இதுவரை எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. இதுதான் உண்மை. வரும் 24-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வர உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் செயல்பட்டு வருகிறது. எனவே, அவருடைய அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அளித்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். எனவே, திமுக புதுச்சேரி எம்எல்ஏக்கள் சார்பில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க உள்ளோம்” என்று சிவா தெரிவித்துள்ளார்.
