பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார். 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள எடப்பாடி அடுத்த அஸ்திரத்தை திமுக எம்.எல்.ஏக்கள் மீது ஏவ இருப்பதாக கூறப்படுகிறது. 

18 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெறவுள்ளது. குறைந்த பட்சம் 6 இடங்களில் வென்றால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்கும். குறைவாக வென்றால் அரசு கவிழ்ந்து விடும். 3 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் மீதும் கண் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்த குட்கா புகாரை சட்டசபையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கையிலெடுத்தார்.  ’’குட்கா புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்தார். 

திமுகவினர் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்று ஆளும்கட்சியினர் கேட்க, திமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் திடீரென குட்கா பொட்டலங்களைச் சட்டசபையில் எடுத்துக்காட்டினர். திமுக உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக் குழுவுக்குப் பரிந்துரை செய்தார். இந்தப் பிரச்சனை உரிமைக் குழு தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் சென்றது. 

இந்த நிலையில் உரிமைக்குழுவின் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக நீதிமன்றத்தை நாடியதால்இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என அதிமுக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொள்ளாச்சியில் இருந்த ஜெயராமன் சென்னைக்கு விரைந்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் நீதிமன்ற இடைக்கால தடையை நீக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார்.

அப்படி தடை நீங்கும் பட்சத்தில் உரிமைக் குழு திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்போவது உறுதி. அதனடிப்படையில் திமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லக் கூடும். நீதிமன்றம் அதை விசாரித்து இறுதி தீர்ப்பு வரும்வரை ஆளும்தரப்புக்கு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி தனது வியூகத்தை அமைத்துள்ளார். ஆட்சி கவிழும். அடுத்து தமது ஆட்சிதான் என்கிற கனவில் இருந்த திமுகவுக்கு இது பேரியாக அமையும்.