"முடிஞ்சா ஆட்சியை கலைங்க பார்க்கலாம்.." எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி
‘தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும்’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுன் வாகையடி முனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ‘பிரச்சரத்தில் ஆண்களோடு அதிகமான பெண்கள் வந்துள்ளதற்கு காரணம் 50% பெண் வேட்பாளர்கள் என்பதனால் தான்.திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி மக்கள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஏமாற்றியதை போன்று மீண்டும் ஏமாற்ற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
பாஜக இருக்கும் தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்க போவதாக பேசுகிறார். தமிழக சட்டமன்றத்தை முடக்க போவதாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும். ஒருவேளை அப்படி முடக்கப்பட்டால் மீண்டும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.
திமுக பொறுப்பேற்ற பின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வார்டுக்குள் சென்று சிகிச்சை குறித்து ஆய்வு செய்தது இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும் தான். தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டது போன்று சிலிண்டர் விலை, டீசல் விலை உள்ளிட்டவை குறைக்கப்படும்’ என்று கூறினார்.