அருமைச் சகோதரர் மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மற்றம் அவரது மனைவி கடந்த செப்டம்பர் 28ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு, மா.சுப்பிரமணியனின் இளைய மகனான அன்பழகன் (34) கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார். இதனையடுத்து கடந்த வாரம் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அன்பழகன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அன்பழகனின் மறைவு திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்;- அருமைச் சகோதரர் மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது. ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை - மா.சுப்பிரமணியன் அவர்களும், அவரது துணைவியார் திருமதி. காஞ்சனா சுப்பிரமணியன் அவர்களும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை கொரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.

மா.சு. இணையர்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா? செல்வன் அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.