அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜியின் சென்னை மந்தைவெளி உள்ள வீட்டிற்கு போலீசார் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை அதிமுக அரசின் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அண்மையில் திமுகவில் இணைந்த அவர், அரவக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் 95 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகள் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடு ஆகிய 3 இடங்களில் சென்னை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சென்னை மந்தைவெளியில் இருக்ககூடிய செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீட்டில் சோதனை நடத்த போலீசார் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் செந்தில்பாலாஜி இல்லாத நிலையில் வீட்டிற்குள்ளே வேறு யாரும் நுழையக்கூடாது என்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வீட்டிற்கு சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.