திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீத்தாபதி மற்றும் அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பி.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ மற்றும் எம்.பி. உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சீத்தாபதி சொக்கலிங்கம் ( 65). இவரது கணவர் சொக்கலிங்கம். இவர் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். கணவர்-மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களாக இருமல், சளி உள்ளிட்ட பிரச்சினை இருந்தது. இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.  

இந்த பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.