dmk mla left from assembly

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூட்டணி கட்சியினர் இன்று வெளிநடப்பு செய்தனர். எம்.எல்.ஏ.க்கள் பணபேர விவகாரத்தில் சபாநாயகரின் விளக்கத்தில் திருப்தியளிக்கவில்லை என்று திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கூவத்தூர் பண பேர விவகார தொடர்பாக, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசிய வீடியோ காட்சிகள் தனியார் தொலைகாட்சி ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சட்டசபையில் எழுப்பின. ஆதாரத்தை அளிக்கும்படி சபாநாயகர் தனபால் தெரிவித்தார். சி.டி. ஆதாரத்தை ஸ்டாலின் அளித்து இது குறித்து விவாதம் நடத்த கேட்டுக் கொண்டார். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், ஆளுநரை சந்தித்து சி.டி. விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்.

2 நாட்களுக்கு முன்பு, கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கும், தலைமைச் செயலாளருக்கும் கவர்னர் கேட்டுக் கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம், குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். கவர்னரின் அறிக்கையை சட்டசபையில் படித்துக்காட்டும்படி கோரிக்கை வைத்தார். இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சபாநாயகர் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த சபாநாயகர், கடிதத்தை படிக்க மறுத்து விட்டார்.

இதை அடுத்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. வெளியில் வந்த ஸ்டாலின், சபாநாயகர், கவர்னரின் கடிதத்தை படிக்க மறுத்துவிட்டார். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஆனாலும், மானியக் கோரிக்கையில் கலந்து கொண்டோம் என்று தெரிவித்தார்.