துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தையூரை சேர்ந்த சீனிவாசன் மருந்துவமனையில் இருந்து தப்பியோடியதாக கூறப்பட்ட நிலையில்  திமுக எம்எல்ஏ தரப்பினர் கடத்தி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார். கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமார் என்பவர் தனது பட்டா நிலத்தில் கால்வாய் அமைப்பதாக புகார் அளித்திருந்தார். வாய்தகராறு முற்றி இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

பின்னர், திருப்போரூர் எம்எல்ஏவும், அவரது தந்தையும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். கோஷ்டி மோதல் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், குண்டடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை எம்எல்ஏ தரப்பினர் கடத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளார். சாட்சி ஆதாரங்கள் தனக்கு எதிராக வந்துவிடுமோ என்ற பயத்தில் புகார் அளித்த நபரையும் கடத்தி வைத்துள்ளனர் என்று எஸ்.பி. கண்ணன் கூறியுள்ளார். 

இந்நிலையில் எம்.எல்.ஏ. இதயவர்மன் மேடவாக்கம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு  செங்கல்பட்டில் உள்ள தனியார் மஹாலில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.