திமுக எம்எல்ஏ இதயவர்மன் தேடப்பட்டு வந்த நிலையில் சென்னை மேடவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமாருக்கும், திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஆகிய இருவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. ஆகையால், இது தொடர்பாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு காரில் திரும்பிச் செல்லும் வழியில் குமார் தரப்பினர் மீது இதயவர்மன் உட்பட 3 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், குமாரின் உதவியாளர் இமயம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஜஜி நாகராஜன், எஸ்.பி.கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், திமுக எம்எல்ஏ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும், இதயவர்மனிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் கைதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எஸ்.பி கண்ணன் தெரிவித்தார். இந்நிலையில், சென்னை அருகே மேடவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.