அதிமுக அமைச்சரவையில் தனக்கு பிடித்த இரண்டு அமைச்சர்கள் குறித்து திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதால் சட்டமன்றமே கலகலத்தது. 

மானிய கோரிக்கை மீதான துறை வாரியான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவருகிறது. போக்குவரத்துத்துறை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. 

இன்றைய விவாதத்தில் பேசிய திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேருந்து கட்டண உயர்வால்  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஊழியர்கள் ஊதியம், பராமரிப்பு செலவு ஆகியவற்றை சமாளிப்பதற்காகவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக விளக்கமளித்தார். 

மேலும் விவாதத்தின்போது பேசிய அன்பில் மகேஷ், எனக்கு அதிமுக அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களை பிடிக்கும். ஒருவர் பாலகிருஷ்ண ரெட்டி, மற்றொருவர் அமைச்சர் பாஸ்கரன். இவர்களில் ஒருவர் அமைதியாகவே இருப்பார். மற்றொருவர் சிரித்த முகத்துடனே இருப்பார்.

இதேபோல் அனைத்து அமைச்சர்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என அன்பில் மகேஷ் நகைச்சுவையாக பேசினார். அன்பில் மகேஷின் பேச்சால் சட்டமன்றம் கலகலத்தது. 

அன்பில் மகேஷ் தனக்கு பிடித்ததாக கூறிய அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, ஓசூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ஆவார். இவர் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.

மற்றொரு அமைச்சரான பாஸ்கரன், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. இவர் காதி மற்றும் கதர் கிராம தொழில்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.