ஊரை ஏமாற்றுவதற்காக பழத்துக்காக பணம் தந்ததாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். பழத்துக்கு ஏன் ரகசியமாக பணம் கொடுக்க வேண்டும் வெளிப்படையாக தந்திருக்கலாமே? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் “வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்றார். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் பினாமியான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை பற்றி இதுவரை எந்த தகவலும் வரவில்லை. 

ஆளுங்கட்சியினர் கோடி கோடியாய் பணம் கொடுத்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டர்கள். மத்தியில் உள்ள ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள ஆட்சியையும் அகற்ற மக்கள் உறுதி பூண்டுள்ளனர். அச்சுறுத்துவதற்காகவே வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியாயமாக பார்த்தால் தேனி மக்களவைத் தொகுதி தேர்தலை தான் ரத்து செய்திருக்க வேண்டும் என்றார்.

வேலூர் தேர்தல் ரத்து ஆவணத்தில் குடியரசுத்தலைவர் கையெழுத்திட்டதற்கு எந்த பரிகாரமும் கிடையாது" என்று கூறினார். பழம் வாங்கியதற்காக பணம் கொடுப்பதாக இருந்தால் முதல்வர் வெளிப்படையாக கொடுத்திருக்கலாம். பழத்துக்காக முதல்வர் பணத்தை குனிந்து கொண்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.