நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தது போல் உள்ளது. நீட்டை ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை’ என்று ஓபிஎஸ் - எடப்பாடியை பங்கமாக கலாய்த்து உள்ளார் துரைமுருகன்.

சென்னையில் நேற்று தெற்கு மாவட்ட திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்ட நிகழ்வு சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், 56 வேட்பாளர்களையும் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய துரைமுருகன், ‘கலைஞர் உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் வெற்றி என்பார். அதற்கு சற்றும் சளைக்காதவ்ர் மா.சுப்பிரமணியன். 24 மணி நேரமும் உழைப்பார் அல்லது ஓடுவார். 1984இல் இருந்து சைதாப்பேட்டையில் உள்ளேன். நின்று ஜெயித்தது காட்பாடி. ஆனால், உண்டு உறங்கியது சைதாப்பேட்டையில்தான். நான் ரொம்ப கை ராசியான ஆள் என கூறுவார்கள். 56 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுகவினர் என்ன ஆட்சி செய்தனர் என்பது தெரியவில்லை.

கலைஞர் காலத்தில் 48 அணைகளை கட்டினோம். ஒரே ஒரு அணையாவது இந்த 10ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுகவினர் கட்டியுள்ளார்களா என்றும் துரைமுருகன் அப்போது கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தோம். ஆளுநர் இதில் தவறு உள்ளது என திருப்பி அனுப்பி விட்டார். ஆளுநரின் வேலை மாநில அரசிடம் இருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான். 

கிராமபுற மக்கள் நீட் வேண்டாம் என கூறுவதாக ஆளுநர் கூறுகிறார். எத்தனை பிரசாரங்கள் செய்தனர். எத்தனை மனு வாங்கியுள்ளனர். அண்ணா இந்திக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அப்போதைய ஆளுநருக்கு அனுப்பினார். அப்போதைய ஆளுநரும் அதை ஏற்று டெல்லிக்கு அனுப்பினார். விரைவில் சட்டமன்றம் கூடும். ஆட்சி பொறுப்பேற்று 9 மாதத்தில் டெல்லி பக்கம் ஒரு முறை தான் முதலமைச்சர் சென்றுள்ளார். டெல்லி பாராளுமன்றத்தில் ஸ்டாலினை போல் ஒரு முதலமைச்சர் இல்லை என கூறுகின்றனர். 

இன்னும் பெரிய திட்டங்களை செயல்படுத்தவில்லை. ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் உயிரை காப்பதே முதன்மை என செயல்பட்டு வருகிறோம். முதல்வர் கொரோனா வார்டுக்கு சென்று வந்த தைரியம் எவருக்கும் வராது. நான்கூட உரிமையுடன் முதல்வரை கடிந்து கொண்டேன். நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தது போல் உள்ளது. நீட்டை ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை’ என்று ஓபிஎஸ் - எடப்பாடியை பங்கமாக கலாய்த்தார் துரைமுருகன்.