அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் வெற்றிவேலின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் இந்நாள் கழக பொருளாளருமான வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக அக்டோபர் 6ஆம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்த நிலையில், நேற்று காலை முதல் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6.40 மணிக்கு வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிவேலின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் ட்வீட், ''அமமுக பொருளாளர் வெற்றிவேல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என திமுக சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளார்.