இதில் குறிப்பிடத்தக்க சுவாரஸ்யம் என்னவென்றால்...தி.மு.க. கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதால் ஸ்டாலின் தன் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக தரையிறங்கி வேலை பார்க்கிறார். அ.தி.மு.க.வின் கூட்டணி குழப்ப உச்சத்தில் இருப்பதால் அமைச்சர் ஜெயக்குமார் மீன் குழம்பு வெச்சு அழைக்காத குறையாக கட்சிகளை இழுக்க துவங்கியிருக்கிறார். 

தி.மு.க.வின் புதிய தலைவரான ஸ்டாலின் மீது வைக்கப்படும் மிக முக்கிய புகார்....’அவங்க அப்பா மாதிரி எளிமையா நடக்குறதில்லை. எப்பவுமே தோரணையா தள்ளிதான் நிக்குறார்.’ என்பதுதான். இது உண்மையோ அல்லது பொய்யோ தெரியவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இந்த இமேஜை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். மாற்றுக் கட்சியில் இருந்து யார் வந்தாலும் மனிதர் விழுந்து விழுந்து கட்சிக்குள் சேர்த்துக் கொள்கிறார். 
அதுவும் அ.ம.மு.க.விலிருந்து எந்த குருவியாவது வந்துட்டா போதும், தன் தோள்ள இடம் கொடுத்து தடவிக்கொடுக்கிறார் ஸ்டாலின். 

செந்தில்பாலாஜி மாதிரி பெரும் தலைகள் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தபோது அறிவாலயத்தில் அவர்களை நேரில் அழைத்து சந்தித்து அவர் சேர்த்துக் கொள்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் தன் கட்சியிலிருந்தே ஒரு காலத்தில் கழன்று போய்விட்டு இப்போது  மொக்க கட்சிகளில், பதவியே இல்லாத நிலையில் இருப்பவர்கள் வந்தாலும் கூட ஸ்டாலினே நேரில் வந்து நின்று அவர்களின் மரியாயதையை ஏற்று, பதிலுக்கு வாழ்த்தி, போட்டோவுக்கு போஸும் கொடுத்து அனுப்புகிறார். 

இதனால் உற்சாகமாக ஊர் திரும்புபவர்கள், தி.மு.க. வெற்றிக்காக தாறுமாறாக உழைப்பார்கள் என்பது ஸ்டாலினின் திட்டம். வருபவர் யார், எதுக்காக சேர்கிறார்கள், எங்கே இருந்து வருகிறார்கள், என்ன பதவியில் இருக்கிறார்கள் என்று எதையும் பார்ப்பதில்லை, பிடிச்சு உள்ளே தூக்கிப் போடுவதிலேயே குறியாய் இருக்கிறார் ஸ்டாலின்.


 
அ.தி.மு.க.விலோ போதும்! போதும்! எனுமளவுக்கு உறுப்பினர்கள் இருப்பதால் அவர்கள் இப்போது கூட்டணிக்கு கட்சிகளை அழைப்பதில்தான் குறியாய் இருக்கிறார்கள். அதிலும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நேற்று முதன் முறையாக ஓப்பனாக கூட்டணிக்கு பிற கட்சிகளை அழைத்திருக்கிறார். “தி.மு.க.வுடன் மட்டுமே எங்களுக்குப் போட்டி. எனவே பா.ம.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளையும் எங்களுடன் கூட்டணி பேச வருக! வருக! என்று திறந்த மனதுடன் அழைக்கிறேன்.” என்று சொல்லியிருக்கிறார். 

கூட்டணி என்பது ரகசியம், பரம ரகசியம்!- என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லியதற்கு, கூட்டணி பேச்சுவார்த்தையெல்லாம் ஒன்றும் ஆரம்பிக்கவேயில்லை! - என்று சி.வி.சண்முகம் மறுத்துக்கொண்டிருந்த நிலையில் இப்போது ஜெயக்குமார் இப்படி வெளிப்படையாய் வலை விரித்திருப்பது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பல்ஸ் கன்னாபின்னாவென எகிறியிருப்பதைக் காட்டுகிறது.