dmk lead alliance party meeting today for third time
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஸ்டாலின் தலைமையில் இன்று மூன்றாவது முறையாக திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி ஸ்டாலின் தலைமையில் நடந்த தோழமை கட்சிகளின் கூட்டத்தில் திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அதன்பிறகு, கடந்த 6ம் தேதி நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், காவிரி உரிமை மீட்பு பயணம் மற்றும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் ஆகியவை நடைபெற்றன. கடந்த 13ம் தேதி திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் சார்பாக, பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க பிரதமரிடம் வலியுறுத்துமாறும், மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வலியுறுத்துமாறும் தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.
இப்படியாக திமுக தலைமையிலான தோழமை கட்சிகளின் சார்பில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இன்று மீண்டும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
