திமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவுடன், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் நாளை காலை செந்தில் பாலாஜி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

அதிமுகவில் கரூர் மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்த பின் டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்தார். டி.டி.வி.தினகரனின் வலது கரமாக இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணையப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அவர், வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுகவில் தன்னை தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக் கொள்வார் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில் நாளை காலை அதாவது 13-ம் தேதி காலை 10.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி இருக்கும் புகைப்படம் இதனை உறுதிபடுத்தும் வகையில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட திமுகவினரும், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும் சென்னை விரைந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் கரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

செந்தில் பாலாஜியை உடனடியாக கட்சியில் இணைத்துவிட்டு அவருக்கு உடனடியாக திமுக கரூர் மாவட்ட செயலாளர் பதவியையும் வழங்க மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இப்படி உடனடியாக செந்தில் பாலாஜிக்கு பதவி கொடுத்து அதன் மூலம் பதவி ஆசையை தூண்டி தினகரனிடம் உள்ள மற்ற ஆதரவாளர்களையும் வளைப்பதுதான் ஸ்டாலினின் திட்டம். அடுத்து வரும் 16ம் தேதி நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியாகாந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள விழாவில் தினகரன் அணியில் இருந்து வரும் மற்ற ஆதரவாளர்களை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் தேசிய தலைவர்கள் முன் தங்களது பலத்தை காட்ட மு.க.ஸ்டாலின் முடிவெருத்துள்ளதாக கூறுகிறார்கள். அந்த விழாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேலும் 5 பேரும், பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் 16-ம் தேதி தனது ஆதரவாளர்களில் யார் யார் திமுக முகாமுக்கு செல்லப்போகிறார்களோ என கதிகலங்கிக் கிடக்கிறது டி.டி.வி.தினகரன் கூடாரம்.