திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகிகளாக இருந்த பலர் தங்களுக்கு அந்த பதவி வேண்டாம் என்று தலைமைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் தகவல்கள் கசிந்துள்ளது.

திமுகவில் இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு இணையாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் மகனும் எம்எல்ஏவுமான பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு மிகவும் நெருக்கம் என்கிற அடிப்படையில் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் கலைஞர் இருக்கும் போதே அண்ணா அறிவாலயத்தில் பழனிவேல் தியாகராஜனுக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டது. அந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி முக்கியத்துவம் பெற்றது.

பதவியை பெற்ற கையோடு திமுகவின் மற்ற அணிகளுக்கு இணையாக கிளைக்கழகம் வரை நிர்வாகிகள் நியமிக்கும் பணிகளை முடுக்கிவிட்டார் தியாகராஜன். மாவட்ட அளவில் தகவல் தொழில்நுட்ப அணி, ஒன்றிய அளவில் அணி, சட்டமன்ற தொகுதி அளவில் அணி என இறுதியாக ஊராட்சி அளவிலும் கூட தகவல் தொழில்நுட்ப அணிகளை உருவாக்கி திமுகவின் ஐடி விங்கை வலுப்படுத்தினார் தியாகராஜன். இதற்கு திமுக தலைமையின் முழு ஒத்துழைப்பு இருந்த காரணத்தினால் பழனிவேல் தியாகராஜன் நிர்வாகிகள் நியமனத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கிட்டத்தட்ட இந்த பணிகளை முடித்த பழனிவேல் தியாகராஜன் சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக இருக்கும் என்று கருதி கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு என்று பணிகளை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பரவலாக ஒன்றிய அளவிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் நிர்வாகிகள் தங்களுக்கு பதவி வேண்டாம் என்று கூறி தலைமைக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர. இதற்கு தனிப்பட்ட காரணங்களை கூறி அவர்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இப்படி வந்த ஏராளமான கடிதங்கள் திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தகவல் தொழில்நுட்ப அணி மூலமாகத்தான் ஊராட்சி அளவில் சமூக வலைதள பிரச்சாரத்தை முன்னெடுக்க திமுக தலைமை முடிவெடுத்திருந்தது. இந்த நிலையில் நிர்வாகிகள் திடீர் விலகல் திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பதவியில் இருந்து விலகும் கடிதம் கொடுத்த நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கே தியாகராஜன் நேரில் வரவழைத்து காரணத்தை கேட்டுள்ளார். ஆனால் தங்கள் பதவி விலகல் முடிவில் சிலர் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனை அடுத்து வேறு வழியின்றி அவர்களை தங்கள் பதவிகளில் இருந்து விடுவித்துவிட்டு புதியவர்கள் நியமிக்கும் பணியை நேற்று முதல் தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கியுள்ளது. அடுத்து ஆட்சிக்கு வரப்போவது நாங்கள் தான் என்று கூறி வந்த திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் திடீரென கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் தான் டாப் ரகம். ஒன்றிய அளவில் மட்டும் அல்லாமல் மாவட்ட அளவில் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ய நிர்வாகிகளுக்கு திமுக தலைமை அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இப்படி அமைச்சர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யும் திமுக ஐடி விங்க் நிர்வாகிகளை குறி வைத்து போலீசார் கைது செய்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வது, கைது செய்து மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று சிறையில் அடைப்பது, காலை முதல் மாலை வரை காவல் நிலையத்திலேயே ஐடி விங் நிர்வாகிகளை அமர வைப்பது என்று போலீசார் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

திமுகவின் ஐடி விங்க் நிர்வாகிகள் பெரும்பாலும் கட்சிப் பின்புலம் இல்லாதவர்கள் சமூக வலைதங்கள் மூலம் பிரபலமாக திமுகவில் பொறுப்புகள் பெற்றவர்கள். இவர்களால் போலீசாரின் இந்த குடைச்சலை பொறுக்க முடியவில்லை. மேலும் அவர்கள் வீடுகளிலும் இதெல்லாம் நமக்கு எதுக்கு என்று பிரச்சனை எழுவதாக கூறுகிறார்கள். இதனால் தான் திமுகவின் ஐடி விங்க் நிர்வாகிகள் அடுத்தடுத்து தங்கள் தனிப்பட்ட காரணங்கள் என்று கூறி பதவிகளில் இருந்து விலகி வருகிறார்களாம்.