அரசியல் சூழல் எவ்வளவோ மாறிவிட்டது! முன்னாடியெல்லாம் ஒரு தலைவரைப் பற்றி எதிர்கட்சி தலைவர் குற்றம் சுமத்தினால், அது சம்பந்தப்பட்ட தலைவரையும் மக்களையும் சென்றடைய பல மணி நேரங்கள் பிடிக்கும். அதற்கு இவர் ஆதாரங்களுடன் பதில் மறுப்பு தருவதற்கு சில நாட்களே பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் புகார் வார்த்தை வந்து விழுந்து, சூடு ஆறுவதற்குள்ளாகவே பதில் சாடல் கொதிக்க கொதிக்க வந்து பாய்கிறது.

  

அந்த வகையில் சமீபத்தில் தாறுமாறாக பல்பு வாங்கிக் கட்டுவது தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்தான். இவரை தி.மு.க.வின் இணையதள விங் வெச்சு செய்கிறது. மிக சமீபத்தில் “ஸ்டாலின் தலைவர் பதவிக்கு தகுதியானவரில்லை. அவருக்கு நாகரிகம் தெரியவில்லை. கருணாநிதி தலைவராக இருந்தபோது, வரைமுறை இல்லாமல் பேசியது கிடையாது. ஸ்டாலினின் உடம்பில் ஓடுவது ஊழல் ரத்தம்.” என்று விளாசியிருந்தார். இதற்கு ஸ்டாலின் தரப்பின் உத்தரவின் பேரில் பதிலளித்திருக்கும் தி.மு.க. இணையதள விங் உறுப்பினர்கள் சிலர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் அமைச்சரை வெச்சு செய்து கொண்டிருக்கின்றனர். அதில் சில சாம்பிள்கள்... 

* தலைவர் கருணாநிதி வரைமுறை இல்லாமல் பேசியது கிடையாது!’ எனும் உண்மையை உலகத்தின் முன் ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ஆனால் இதை ஜெயலலிதா இருந்த காலத்திலேயே நீங்கள் ஒத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு மெரீனாவில் சிலையெடுத்து நாங்களே கொண்டாடியிருப்போம். அது ஆம்பளைத்தனம்-ன்னு போற்றியிருப்போம். அப்போல்லாம் அடிமையா வாய் மூடி கிடந்த நீங்களெல்லாம் தகுதி பற்றி பேசலாமா மிஸ்டர் குமாரு?

* ஆனானப்பட்ட கோர்ட்டுகளே, அதுவும் எங்க கட்சி ஆட்சியில் இல்லாத நிலையிலும் கூட எங்கள் தலைவர். தளபதியாரை ஊழல் புகார் வழக்குகளில் இருந்து விடுவித்து, அவர் கைசுத்தமானவர்ன்னு உரக்கச் சொல்லிடுச்சு. ஆனால் இறந்தும் ‘குற்றவாளி நம்பர் 1’ அப்படின்னு பெயர்வாங்கிய கட்சியில் உட்கார்ந்துகிட்டு ஊழல் பற்றி பேசுறதுக்கு கேவலமா இல்லையா உங்களுக்கு?

* மாநில, மத்திய அரசுகள் தரும் நெருக்கடிகளையும் தாண்டி மிக வலுவாக இயக்கத்தைக் கொண்டு செலுத்துற, ஆளுங்கட்சியில் இருக்கும் நபர்களே தேடி வந்து இணையுற அளவுக்கு தலைவனுக்கான திராணியை வளர்த்து வெச்சிருக்கிற எங்க தளபதியை பார்த்து ‘தலைவர் தகுதி இல்லை’ன்னு சொல்ல உங்களுக்கு கூசலையா?... என்று போட்டுப் பொளந்து கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் பற்றி அவர்கள் இன்னும் அதிகமாக எடுத்து வைத்திருக்கும் சில சாடல்களை இங்கே குறிப்பிடவும் முடியாது. என்ன பதில் தரப்போகிறார் அமைச்சர்?