9 மாத ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் திமுக செய்யவில்லை. எனவே, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மு.க.ஸ்டாலின் திணறுகிறார். காவல் துறை தற்போது திமுக அரசின் ஏவல் துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவல் துறை நடுநிலையுடன், ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும். 

திமுகவின் மிரட்டல், உருட்டல்களுக்கெல்லாம் அதிமுகவினர் எந்தக் காலத்திலும் அஞ்சமாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில் திருச்சி மாநகரம் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற இரவு பகலாக உழைக்க வேண்டும். ஸ்டாலின் நம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறார். இதற்கு எல்லாம் பயந்தவர்கள் நாங்கள் அல்ல. கருணாநிதி முதல்வராக இருந்த போது சட்டப்பேரவைக்குள் ஜெயலலிதாவை தாக்கினார்கள். நான் இனி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தான் சட்டப்பேரவைக்கு உள்ளே நுழைவேன் என்று ஜெயலலிதா சபதம் செய்தார். அதே போல் முதல்வராக பதவி ஏற்றார். எம்ஜிஆரும் திமுகவினரால் மைக் ஆப் செய்யப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார். சவால் விட்டு முதல்வரானார் எம்ஜிஆர். 

அந்த இரு பெரும் தலைவர்கள் செய்த சாதனைகளை நாங்கள் எடுத்து கூறி வருகிறோம். நீங்களும் செய்ததை கூறுங்கள் அதை விட்டு விட்டு வேட்பாளர்களை அச்சுறுத்துவது, வழக்கு பதிவு செய்வது, தேர்தல் பணியில் ஈடுபட முடியாமல் முடக்கப் பார்க்கின்றனர். திமுகவின் மிரட்டல், உருட்டல்களுக்கெல்லாம் அதிமுகவினர் எந்தக் காலத்திலும் அஞ்சமாட்டார்கள்.

9 மாத ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் திமுக செய்யவில்லை. எனவே, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மு.க.ஸ்டாலின் திணறுகிறார். காவல் துறை தற்போது திமுக அரசின் ஏவல் துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவல் துறை நடுநிலையுடன், ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசு ஊழியர்கள் திமுக அரசை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படித்த அரசு ஊழியர்களையும் திமுக ஏமாற்றிவிட்டது. தேர்தலில் தனித்து நிற்க துணிவு இல்லாத கட்சி திமுக. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தில் இருந்தால் தனித்து போட்டியிடுங்கள்.

பொய்ப் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்கினால், அது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை நிறைவேற்றியதாக முதல்வர் மு.க.ஸ்டாலினும், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலினும் கூறுகின்றனர். ஆனால், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டருக்கான மானியம், ஓய்வூதிய உயர்வு, நகைக் கடன் ரத்து ஆகியவை எங்கே என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், எதற்கும் திமுகவிடம் பதில் இல்லை. நீட் விவகாரத்தில் திமுக விடுத்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால், இதுவரை திமுகவிடம் பதில் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையுடன் பணியாற்றி, வாக்கு சேகரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.