நடைப்பயிற்சியை கூட கொலை  பயிற்சியாக்கிய இயக்கமான திமுக வினரின் குற்றச்செயல்கள் கொரோனா காலத்திலும் அதிகரித்து இருக்கிறதே தவிர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு வழக்கம்போலவே பாராட்டும் வகையில் உள்ளது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்ற இளைஞர் கடத்திக் கொலை செய்யப்பட்டார், அதற்கு நியாயம் கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் தாக்குதல் முயற்சி நடைபெற்றது. இதை கண்டித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது எனக்கூறி அரசையும் காவல் துறையையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் குத்தீட்டி பகுதியில் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது:- 

உண்மைதான்,  நடைப்பயிற்சியை கூட கொலை பயிற்சியாக்கிய நாசகர இயக்கமான திமுக வினரின் குற்றச் செயல்கள்தான் கொரோனா காலத்திலும் அதிகரித்து இருக்கிறதே தவிர மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு வழக்கம் போலவே, இந்த நாடே பாராட்டும் வகையில் தான் கட்டுக்குள் இருக்கிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்திலும் கடப்பாக்கல் திருடுவது, அடுத்தவர் நிலங்களை அபகரிப்பது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பிரியாணி கடை தொடங்கி பியூட்டிபார்லர் வரை அடிதடிகள் நடத்துவது, பெண் என்றும் பாராமல் ஓசி தேங்காய்க்காக ஒரு ஒன்றிய செயலாளரே தாக்குதலில்  ஈடுபடுவது. இவை அனைத்தையும் கோர்த்து பார்த்தால் கொரோனா காலத்திலும் அதீதமான குற்றச்செயல்களில் திமுகவினர் ஈடுபட்டிருப்பது பொதுவாழ்க்கைக்கு களங்கத்தை ஏற்படுத்துகிற  போக்கிரித்தனமாகும். 

இவ்வளவு ஏன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெரும் தலைவருமான?  சண்முகவடிவேல் என்பவர் யூனியன் அலுவலகத்தில் இருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட இருந்த மரங்களை வெட்டி கடத்தி விற்றதோடு அவரது தோட்டத்தில் சுமார் 10 கோடி மதிப்புள்ள மணல் மற்றும் சவுடு மணல் கடத்தி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இன்று வரை மேற்படி நபர் தலைமறைவாக இருக்கிறார் என்பதே திமுகவினரின் யோக்கியதைக்கு சான்று என குத்தீட்டி பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.