எங்கே இருந்துதான் செல்லூர் ராஜூ இப்படியான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார் என்று தெரியவில்லையே.. அவர் உண்மையிலேயே விஞ்ஞானிதான் எனவும் கலாய்த்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஏதாவது ஒரு தொற்றுநோய் வந்து கொண்டே இருக்கிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் எந்த நோயும் வராது என்றும் அவர் கூறியுள்ளார். செல்லூர் ராஜுவின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனால் மழைக் காலத்தில் அரசு துரிதமாக செயல்படவில்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்தில் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இந்துக் கோவில்கள் குறிவைக்கப்படுகின்றன என்ற விமர்சனங்களை தொடர்ந்து திமுக மீது பாஜக முன்வைத்து வருகிறது. அதே நேரத்தில் அதிமுக பெட்ரோல், டீசல் மீதான மாநிலத்தின் வரிகளை குறைத்திட வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறுவாழ்வு வழங்கிட வேண்டும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்நிலையில்தான் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ திமுகவை மிககடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்ற செல்லூர் ராஜு, திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் நிறைவடைந்து விட்டது, ஆனால் இன்னும் கூட கொடுத்த வாக்குறுதிகளை அது நிறைவேற்றவில்லை, இன்னும் கூட அதிமுக காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. திமுக விளம்பரத்தை விட்டுவிட்டு மக்களுக்கு உண்மையான விடியலை தரவேண்டும். தமிழகத்தில் பல கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை தினந்தோறும் நடத்துகின்றன. ஆனால் அதிமுக தலைவர்கள் மட்டும் சிந்தித்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பலரும் அதிமுக சோர்வடைந்து விட்டதாக கூறுகின்றனர் ஆனால் எப்போதும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் படையை வெல்ல யாரும் இல்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே இப்போது தேர்தல் நடத்தினால் கூட அதிமுக ஆட்சியை பிடிக்கும்.

"அதிமுகவை வென்றவனும் இல்லை, கடவுளை கண்டவனும் இல்லை"ஆனால் முட்டாய் கொடுத்து குழந்தைகளை கடத்துவது போல் திமுக மக்களை பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி விட்டது. பொய் சொல்லி ஆட்சியை பிடித்துள்ளது திமுக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை, விரைவில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் பிரச்சனைகளை எழுப்ப போகிறோம். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதாவது ஒரு தொற்றுநோய் வந்து கொண்டே இருக்கிறது நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நோயும் வராது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஸ்டாலினை முன்னிலைப்படுத்திதான் ஆட்சி நடைபெறுகிறது. தற்போது நிலுவையில் உள்ள எம்எல்ஏக்கள் நிதியை திமுக அரசு விடுவிக்க வேண்டும், நகர்ப்புற தேர்தல் வர உள்ளதால் மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். அவர் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நோய்கள் வருவதாக குறிப்பிட்டுள்ளதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் எப்படி உருவானது, அதை எப்படி அழிப்பது என்று தெரியாமல் உலக விஞ்ஞானிகள் திணறி வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கொரோனா வந்துள்ளது என செல்லூர் ராஜூ பேசியுள்ளதை பலரும் கிண்டல் செய்து கலாய்த்து வருகின்றனர்.

எங்கே இருந்துதான் செல்லூர் ராஜூ இப்படியான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார் என்று தெரியவில்லையே.. அவர் உண்மையிலேயே விஞ்ஞானிதான் எனவும் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜு.. தெர்மாகோல் ராஜு என பலரும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவர் திமுக வந்தது முதல் பல்வேறு நோய்கள் வந்து கொண்டிருக்கிற்து என்ற கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உலக வெப்பமயமாதல் நீர்நிலைகளில் தண்ணீர் விரைவாக ஆவியாகிறது எனவே நீர் ஆவியாவதை தடுக்க தனது 2015ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் குளத்தில் 96 மில்லியன் மிதக்கும் பிளாஸ்டிக் பந்துகளை அமெரிக்க விஞ்ஞானிகள் குளத்தில் மிதக்கவிட்டு அதன்மூலம் குளத்தில் உள்ள நீர் ஆவியாதலை தடுத்தனர். இது ஒரு வெற்றிகரமான முயற்சியாக கருதப்பட்டது. செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்த போது, அதை அப்படியே காப்பி அடித்து, தெர்மாகோல் அட்டைகளை செல்லோ டேப்பால் ஒட்டி மதுரை வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலை தடுக்கும் வகையில் அட்டைகளை மிதக்க விட்டார். அவரின் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அமைச்சர் மிதக்க விட்ட தெர்மாகோல் அட்டைகள் காற்றில் பறந்துவிட்டன. அவரின் இந்த நடவடிக்கையை பலரும் அப்போது கடுமையாக விமர்சித்தனர். அன்று முதல் அவர் விஞ்ஞானி ராஜு... தெர்மாகோல் ராஜு என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
