காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு, கடந்த 29ம் தேதி முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் வரையில் அமைதி காத்துவிட்டு, ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு நேற்று உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு நாடியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது. மத்திய அரசின் அலட்சியமான செயல்பாடு, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு அனைத்து கட்சி கூட்டம் தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்டது. அப்போது திமுக சார்பில் திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இம்முறை திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.