ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு வெறித்தனமாக வேலை பார்த்தார்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பலப்பரீட்சையாக இருந்தது. ஆனால், திமுகவினர், வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு வெறித்தனமாக வேலை பார்த்தார்கள். அதிமுகவினரோ, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். அதனால்தான் பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவர்களின் ஆலோசனையைப் பெற்று நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்றார். குடியுரிமைச் சட்டத்தினால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராமநாதபுரத்தில் உள்ள பிரச்சனையை அன்வர்ராஜா சொல்கிறார். அதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடிய இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள்.

மேலும், கூட்டணி ஆதரவு இல்லையென்றாலும் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்கையில், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் தான் அவரவர்களின் பலம் தெரியும். அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டாலும் அதிமுகவை வெல்ல முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.