வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொறுத்துவது தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு எப்.சி.க்குச் செல்லும் வாகனங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். கருவி போன்றவை வாங்கிப் பொருத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போக்குவரத்துத்துறைக்குள் சில தனியார் நிறுவனங்களை அனுமதித்து அவற்றின் மூலம் மெகா வசூல் செய்து கொண்டிருக்கும் மோசடிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது என்ன அரசு நிர்வாகமா? அல்லது போக்குவரத்துத்துறை அமைச்சர் நடத்தும் துக்ளக் தர்பாரா? என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்;- ஊழலுக்காக கலைக்கட்ட ஒரேயொரு ஆட்சி திமுக தான். திமுக ஆட்சி காலத்தில் 2ஜி ஊழல் லட்சம் கோடிக்கணக்கில் ஊழல் செய்து வந்தனர். யாரோ எழுதி கொடுத்த துண்டுசீட்டு அறிக்கையை வைத்து மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தி வருகிறார்.  ஊழல் பற்றி பேச திமுகவுக்கு தகுதியும் இல்லை. 

மேலும், குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் ஜிபிஎஸ், ஒளிரும் பட்டை வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை. 15 நிறுவனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளும், 10 நிறுவனங்களில் ஜிபிஎஸ் கருவிகளும் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் ஒளிரும் பட்டை போன்ற கருவிகள் தனியார் நிறுவனங்கள் மட்டுமே தயார் செய்து வருகிறது. நெடுஞ்சாலைகளில் சிசிடிவி பொருத்துவதற்கான டெண்டர் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறும் ஸ்டாலின் அதை நிரூபிப்பாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.