தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இருக்காது என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ:- திமுக மக்களை சந்திக்க தயாராக இல்லை. ஆன்லைன் அரசியலுக்கு வந்து விட்டனர். கொரோனா தாக்கத்தினை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஆன்லைன் அரசியல் பணி செய்து வருகின்றனர். அரசியல் மற்றும் கட்சி பணிகளை ஆன்லைன் மூலமாக செய்வதற்கு திமுகவினர் தள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கு காரணம் திமுகவினர் சுயமாக சிந்திக்கவில்லை. சுயமாக சிந்தித்து மக்களை சந்திக்கவும் களத்திற்கு செல்லவும் தயாராக இல்லாமல் பிரசாந்த் கிஷோர் குழுவின் மூலமாக இயக்கப்படுகின்றனர். திமுக தானாக இயங்கவில்லை. நேரடியாக இயங்கக் கூடிய இயக்கம் அதிமுக. எங்களை இயக்குவதற்கு யாராலும் முடியாது. இயக்கத்திற்கு விலைபேசி ஒரு குழுவிடம் ஒப்படைத்து, அவர்களின் வழிகாட்டலின்படி நடைபெறுகின்ற இயக்கம் திமுக. ஏதேச்சையாக, தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அரசியல் அனுபவம் உள்ள துரைமுருகன் போன்றோர் இதை எல்லாம் மனசஞ்சலத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணாவின் கொள்கையான இருமொழிக் கொள்கைதான் எங்கள் கொள்கை என்பதை சட்டமன்றத்தில் திட்டவட்டமாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆகையால், மத்திய அரசின் கொள்கை பற்றி நமக்கு கவலை இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இதே கொள்கையைதான் கடைப்பிடித்தனர். அந்த வழியில் உள்ள அரசு இதே கொள்கையைதான் வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.