திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த பொறுப்பு அந்தியூர் செல்வராஜூக்கு வழங்கப்பட்டுள்ளது. 

திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி. இவர் சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி. சீட் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். அதிமுகவில் அருந்ததியின வகுப்பைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போல தனக்கும் எம்.பி. பதவி தர வேண்டும் என்று கேட்டார். ஆனால், கருணாநிதியால் தண்டிக்கப்பட்ட அதே வகுப்பைச் சேர்ந்த அந்நியூர் செல்வராஜூக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது. அதேபோல், வி.பி.துரைசாமிக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனால், எம்.பி. சீட் வழங்கப்படவில்லை. அதேவேளை கட்சிப் பதவியும் பறிபோக இருக்கிறது என்பதால் வி.பி.துரைசாமி அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சென்னை கமலாயத்தில் சென்று தனது மகன், மருமகனுடன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜக தரப்பில் அறிக்கை வந்தாலும், இதில் அரசியல் காய் நகர்த்தல் இருப்பதாகவே கூறப்படுகிறது. ஏனென்றால், முருகன்,  வி.பி.துரைசாமி இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். முருகனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சந்திப்பு எனக் கூறினாலும், அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில், வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அதே சமூகத்தை சார்ந்த மாநிலங்களவை எம்.பி. அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.