கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று ரேலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளின் வேட்பாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட திமுகவின் பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகனுக்கு பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், துரைமுருகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில்;- திமுக பொதுச்செயலாளர் உடல்நிலை சீராக உள்ளது. கவலைப்படும் வகையில் துரைமுருகன் உடல்நிலை இல்லை. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று ரேலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.