புதிய பொதுச்செயலாளர் தேர்வு..! திமுக பொதுக்குழு கூடுகிறது..!
அன்பழகனுக்கு பிறகு திமுக பொதுச்செயலாளராக யார் வருவார் என்கிற கேள்வி நிலவி வரும் நிலையில் திமுக பொதுக்கூழு வரும் 29ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் அண்மையில் மரணமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.பி சாமி மற்றும் காத்தவராயன் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.
திமுக பொதுச்செயலாளராக கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தும் கடந்த 7ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அன்பழகன் மறைவை அடுத்து திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 1 வார காலம் ஒத்திவைக்கப்பட்டு கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நேற்று மாலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் படத்திறப்பு நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இந்த நிலையில் அன்பழகனுக்கு பிறகு திமுக பொதுச்செயலாளராக யார் வருவார் என்கிற கேள்வி நிலவி வரும் நிலையில் திமுக பொதுக்கூழு வரும் 29ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் அண்மையில் மரணமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.பி சாமி மற்றும் காத்தவராயன் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.