திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 6 ம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக இருந்த  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர்  அக்டோபர் 31-ம் தேதி நவம்பர் மாதம் 10-ம் தேதி (இன்று) பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி இன்று திமுக பொதுக்குழு கூட்டம் தற்போது சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தொடங்கியுள்ளது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 4000 பேர் பங்கேற்று இருக்கிறார்கள். 

வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, இடைத்தேர்தல் தோல்வி ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவினால் ஓய்வு எடுத்து வரும் நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடு குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல் வருகின்றது.