திமுக பொதுக்குழு கூட்டம் தற்போது சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தற்போது நடைபெற்று வருகிறது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொருளாளர்,துணைப்பொதுச்செயலாளர்கள், முதன்மைச் செயலர், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 4000 பேர் பங்கேற்று இருக்கிறார்கள். 

மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களுக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த கூட்டத்தில் அண்மையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மற்றும் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த குழந்தை சுர்ஜித் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற பட்டிருக்கிறது.

திருநங்கைகளை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி விதிகளில் திருத்தும் கொண்டுவருவது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் திமுக அமைப்பு தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, இடைத்தேர்தல் தோல்வி ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் உள்ளாட்சித்தேர்தலை நடத்தும் வரையில் அதே நிர்வாகிகள் பொறுப்பில் நீடிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. இணையதளம் மூலமாக கட்சியில் நிர்வாகிகளை சேர்க்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.