நாளை கூடும் திமுக பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மாநில அளவில் உயர் பதவி வழங்க அக்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்வாகியுள்ள துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவுக்கான அங்கீகாரத்தை பெறவே நாளைய பொதுக்குழு கூடுகிறது. அதே சமயம் கட்சியில் கட்டமைப்பு ரீதியில் பல்வேறு மாற்றங்களை செய்ய ஸ்டாலின் முடிவெடுத்து அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு அம்சமாக கட்சியில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு மாநில அளவிலான பதவிகளை வழங்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இது குறித்தே கடந்த மூன்று நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளை அழைத்து ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து காலியான துணைப் பொதுச் செயலாளர் பதவி உடனடியாக அந்தியூர் செல்வராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரார்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அந்தியூர் செல்வராஜ் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சற்குண பாண்டியன் மறைவை தொடர்ந்து அவரது அந்த பதவி காலியாகவே உள்ளது.

மொத்தம் 4 துணைப்பொதுச் செயலாளர்கள் என்கிற நிலையில் மூன்று பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். எனவே மேலும் ஒருவரை துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அந்த அடிப்படையில் தனது நீண்ட காலநண்பரும், தனக்கு நெருக்கமான ஆதரவாளருமான பொன் முடியை திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொன்முடி கலைஞர் இருக்கும் போதே ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று முழங்கியவர்.

மேலும் ஸ்டாலினை திமுகவில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக கொண்டு வருவதற்கு தொடர்ந்து பணியாற்றியவர். கலைஞருக்கு நெருக்கமாக இருந்த அதே சமயம் ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருந்தவர். எனவே அவருக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். பொன்முடி துவக்கம் முதலே மாநில அளவிலான பொறுப்புகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டியதில்லை. விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர் பதவி தான் அவருக்கு மிகவும் பிடித்தமான பொறுப்பு. ஆனால் தற்போது விழுப்புரத்தை வடக்கு, தெற்கு, மத்திய என மூன்று மாவட்டமாக நிர்வாக வசதிக்கா பிரித்துள்ளனர்.

இதே போல் விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டமும் தனி நிர்வாகமாக திமுகவில் செயல்பட்டு வருகிறது. இதனால் மாவட்டச் செயலாளர் என்கிற அதிகாரம் பொன்முடிக்கு சுருங்கிவிட்டது. என்னதான் கட்சியின் சீனியர் என்கிற அடிப்படையில் பிரிக்கப்ப்டட மாவட்ட நிர்வாகிகள் பொன்முடியிடம் ஆலோசனை கோரினாலும் இறுதி முடிவு அவர்களே எடுக்கிறார்கள். இதனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வருத்தத்தில் இருந்த பொன்முடியை ஸ்டாலினே நேரில் அழைத்து சமாதானம் செய்தார். அதன் பிறகு அவரது மகனுக்கு எம்பி சீட் கொடுத்து நாடாளுமன்றமும் அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் பொன்முடியின் அனுபவம் மற்றும் செயல்பாடுகள் வடமாவட்டங்களில் அக்கட்சிக்கு பெருமளவில் தேவைப்படும். எனவே பொன்முடிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி வட மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதுநாள் வரை மாநில பதவிகளை ஒதுக்கி வந்த பொன்முடி இனி மாவட்ட அரசியலை மகனிடம் கொடுத்துவிட்டு சென்னையில் முகாமிட்டு மாநில அளவிலான அரசியலை கவனிக்க முடிவு செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.