செங்கல்பட்டில் இளம்பெண் தற்கொலையில் திமுக இளைஞரணி நிர்வாகி மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
செங்கல்பட்டில் இளம்பெண் தற்கொலையில் திமுக இளைஞரணி நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே நைனார் குப்பத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதுடன் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக திமுக இளைஞரணி அமைப்பாளர் தேவேந்திரன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வைத்து பாலியல் தொல்லைக்கு இணங்க மிரட்டியதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில், மற்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து  அறிக்கை மேம் அறிக்கை வெளியிடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை என்று சமூக ஊடங்களில் விமர்சித்துவருகின்றனர். மற்றவர்களுக்கு இரு நியாயம், தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒரு நியாயமா எனவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். #justiceforsasikala என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அதிமுக, பாஜகவினர் சமூக ஊடங்களில்  திமுகவை விமர்சித்துவருகிறார்கள்.


இந்நிலையில் இதுதொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதில் கூறியுள்ளார். அந்தப் பதிவில்,  “செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்” என்று பதிவில் உதயநிதி குறிப்பிட்டிருந்தார்.


இதற்கிடையே தேவேந்திரனை திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சித் தலைவர் மு.க. ஸடாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் - சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழி நாடு பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் டி.தேவேந்திரன் மற்றும் டி.புருஷோத்தமன் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செயல்பட்டாதலும் கழக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.